
"அம்மா " என்று அழைத்து நான்
அணைத்துக் கொள்ளும் போதும்
"அம்மா " என்று என் மகன்
என்னை அழைத்து
அணைத்துக் கொள்ளும் போதும்
உள்ளத்தில் எழும்
சந்தோசத்திற்கு அளவே இல்லை ................
இருபத்தெழு வருடம்
உங்கள் அன்பெனும் வலைக்குள்
என்னை பாதுகாப்பாய் வைத்திருந்தீர்கள்.
என்னை பாதுகாக்கும் பொறுப்பை
என் கணவருக்கு கொடுத்த பின்பு
என்னை விட்டு நீங்கள்
அதிகமாய் விலகி இருக்கிறீர்கள்.
நினைத்தவுடன் வந்து நிற்கும் தூரத்தில்
நான் இப்போது இல்லை
அதனால் தானோ இந்த பிரிவு .....................
திருமணம் ஆன உடனே
பெண்களுக்குப் பிறந்த வீடு
இரண்டாம் பட்சமாக
ஆகி விடுகின்றது ........
இதை நினைக்கும் போது
வேதனையாய் இருந்தாலும்
இது தான் பெரும்பாலான
பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதி
என்று எண்ணி தான்
மனதைத் தேற்ற வேண்டியிருக்கிறது ......................
ஒவ்வொரு பெண்ணும்
தன் வீட்டிற்கு
வர இருக்கும் மருமகள்
இத்தனை வருடம் தன்னை
அன்பாய் வளர்த்த
தாய் , தந்தையை
உடன் பிறந்த உறவுகளை
தான் வளர்ந்த வீடு
தான் வளர்ந்த ஊர்
இவை எல்லாவ ற்றையும்
விட்டு விட்டு தானே
தன் வீட்டிற்கு வருகிறாள்
என்பதை உணர்ந்து
அவர்களிடம் புரிந்து நடந்தாலே
ஒவ்வொரு பெண்ணுக்கும்
புகுந்த வீடும்
பிறந்த வீடு போல
சந்தோசம் கொடுக்கும் .....................
என் பதின்மூன்றாம் வயதில்
பள்ளி விடுமுறைக்காக
அத்தை வீட்டில்
நீங்கள் விட்டு விட்டு
வந்த பின்பு
உங்களை
பார்க்க முடிய வில்லையே
என்று எண்ணி
நானும் , அக்காவும்
அங்கு நீங்கள் விட்டுச் சென்ற
சட்டையை வைத்துக் கொண்டு
அழுததை
இன்னும் மறக்கவில்லை அப்பா .................
புதிய உறவுகள்
புதிய ஊர்
புதிய மக்கள்
புதிய அனுபவங்கள்
இவை எல்லாமே
புதியது என்றாலும்
ஒரு பெண்ணுக்கு
இது தான் கடைசி வரை
வரப் போகின்ற
வாழ்க்கை என்பதை
நான் உணர்கின்றேன் .
அதனால் தான்
நீங்கள் எல்லோரும்
என் மீது காட்டிய அன்பினை
அன்பின் தூய்மையை ............
நான் உங்களோடு
சந்தோசமாய் வாழ்ந்த
கடந்தகால நினைவுகளை
இவை எல்லாவற்றையும்
என் மனதுக்குள்
மிகவும் பத்திரமாய்
புதைத்து வைத்திருக்கிறேன் ...............
அவ்வப்போது புரட்டிப் பார்க்கிறேன் ...................
பெண்ணாய்ப் பிறந்தாலே
பெற்றோர்களைப் பிரிந்து
உடன் பிறந்த உறவுகளைப் பிரிந்து
ஒரு காலக் கட்டத்தில்
சென்று தான் ஆக வேண்டும் .
அந்தப் பிரிவில்
வருத்தம், வேதனை
அதிகமாய் இருந்தாலும்
வரவேற்று தான் ஆக வேண்டும்
புதிய வாழ்க்கைக்காக .....................