ஆகஸ்ட் 12, 2022

தேடல் இனிது ....

தவழும் போதோ
தாயின் மடி தேடி ஓடும்
தேடல் இனிது......

நடக்கும் போதோ 
தந்தையின் கை விரல் பிடிக்க 
எட்டி நடை வைத்து ஓடும் 
தேடல் இனிது......

பள்ளி படிப்பின் போதோ 
இனிக்காத கல்வியையும் 
இனிக்கச் செய்யும் 
ஆசிரியர் , நண்பர்களின் 
முகம் தேடி ஓடும் 
தேடல் இனிது......

கல்லூரி படிப்பின் போதோ 
ஆனந்தமாய் ஆட்டங்கள் என்றாலும் 
வாழ்க்கைக்கான பாடத்தை 
விருப்பத்தோடு புரிந்து தேடும் 
தேடல் இனிது ......

வேலை தேடும் போதோ 
கனவுகளை தள்ளி வைத்து 
நிஜங்களை தேடி ஓடும் 
தேடல் இனிது......

வாழ்க்கைத் துணையை தேடும் போதோ 
ஆயிரம் கனவுகளோடு 
கைபிடிக்க காத்திருக்கும் 
புது உறவின் புரிதல்களை தேடும் 
தேடல் இனிது......

திருமண வாழ்வின் போதோ 
எதிர்பார்ப்புகள் 
நிறைந்தாலும் , சிதைந்தாலும் 
பிள்ளையெனும் பிடிப்பொன்று 
பிடித்திழுக்க 
தனை மறந்து 
அதன் பின்னே ஓடும் 
தேடல் இனிது ......

நிம்மதியை  
வெளியில் தேடி ஓடாமல் 
உள்ளுக்குள் தேடி ஓடும் 
தேடலோ 
என்றுமே இனிது .......














ஜூலை 21, 2022

வார்த்தைகள் சில ......

சிதைந்து போகச் செய்யும்
சில வார்த்தைகள் ....
தாங்கி மீண்டும் எழச்  செய்யும் 
சில வார்த்தைகள் ....

புரிதல் இல்லாமல் 
சில வார்த்தைகள் ....
சிந்திக்க வைக்கும் 
சில வார்த்தைகள் ....

தயக்கம் இல்லாமல் 
சில வார்த்தைகள் ....
பேசத் தயங்கும் 
சில வார்த்தைகள் ....

அழ வைத்து விடும் 
சில வார்த்தைகள் ....
சிரிக்க வைத்து விடும் 
சில வார்த்தைகள் ....

வார்த்தைகள் 
தட்டி எழுப்பவும் செய்யும் .....
வெட்டி வீழ்த்தவும் செய்யும் ......

வார்த்தைகளை வீசி எறிந்து 
உணர்வுகளோடு விளையாடாதீர்கள் ......
பேசும் முன்னே 
ஒரு முறை சிந்தித்தால் போதும் 
வலிகளைத் தரும் வார்த்தைகள் 
வராது நிச்சயம் .......



ஜூலை 08, 2022

என்னவன் வருகை ......

தொலைதூர பயணத்தால்
தொலைந்த நாட்களின் பொழுதுகளையும்
சேர்த்து வாழ
காத்திருக்கின்றேன் ........

அடியோடு வெட்டி புதைத்த ஆசைகள் 
எட்டி பார்க்குது மெல்ல மெல்ல ......
ஒரு முறை தினம் பார்க்கும் கண்ணாடியை 
பல முறை பார்க்கிறேன் இன்று ......

உன் வருகைக்கான நேரம் 
நெருங்க நெருங்க 
எனக்குள் கேட்பதன்னவோ 
வாகன ஒலிகள் மட்டுமே .......

தொட்டு உணர முடியா 
கைபேசித்திரையில் 
உன் முகம் தேடியே 
காத்திருந்த நாட்களோ 
கடந்து போய் விடும் இன்றோடு ........

காத்திருக்கின்றேன் 
ஆயிரம் உணர்வுகளை 
சொல்லாமல் சொல்லும் 
உன் விழியின் 
தேடலை நோக்கி 
வாசலிலே ........

ஜூன் 24, 2022

ஹைக்கூ கவிதைகள்

விரிந்த உலகத்தை கையில் தேடி தேடியே
வீடெனும் உலகத்திற்குள் கை கோர்க்க விடுவதில்லை
கைபேசி .........

ஒருவர் தூங்க
பலரை தட்டி எழுப்பும் ஒலி 
குறட்டை .......

உயிர்த் துடிப்போடு 
கண்களை மூடி 
இருண்ட உலகத்திற்குள் 
தினம் அழைத்துச் செல்கின்றது 
தூக்கம் .......


ஜூன் 19, 2022

என் அன்பு அப்பாவிற்கு ......

என் அன்பு அப்பாவிற்கு ......

எங்களை கரைசேர்க்க
உங்கள் வேதனைகளை
உள்ளுக்குள் மறைத்து
கலங்கி நின்ற நாட்கள்
தூக்கம் தொலைத்த நாட்களை
என்றுமே மறக்க முடியாது .......

எங்கள் வாழ்க்கை 
அழகாய் மலர
ஆயிரம் முட்கள் தந்த வலிகளை கூட
ஆனந்தமாய் ஏற்று
அன்போடு வழித்துணையாய் வந்தீர்கள் ......

நீங்கள் தந்த
அன்பு கடனை அடைக்க
ஆயிரம் ஜென்மங்கள்
போதாது எனக்கு .......

ஜூன் 09, 2022

நம்பிக்கை துரோகம்

அன்பை புதைத்து
ஆத்திரத்தை தூண்டி விடும் ....
அழகான உறவுகளை 
அடியோடு பிரித்து விடும் ....

ஆயிரம் பொய் திரைகள் போர்த்தி 
உண்மையெனும் சூரியனை 
மறைக்க நினைத்தாலும் 
மறைக்க முடியாது ....
சுட்டெரித்து விடும் 
நிச்சயம் ஒரு நாள் ....

உடைந்த நம்பிக்கையை 
ஒட்ட வைத்தாலும் 
மறக்க முடியாது 
மனம் உடைந்த நாட்களை .....
ஆற்ற முடியாது 
அது தந்த காயங்களை .......

நல்லவர் போல் எள்ளி நகையாடி 
முதுகில் குத்தும் 
நன்றி இல்லா 
நயவஞ்சக மனிதர்களிடம் 
விலகியே இருங்கள் ......

துரோகம் என்ற கல்லினால் 
நம்பிக்கை எனும் வாழ்க்கை கண்ணாடியை 
உடைத்து விளையாடும் 
உணர்ச்சியற்ற மனிதர்களிடம் 
எச்சரிக்கையாய் இருங்கள் ........

துணிச்சலோடு 
தூக்கி எறியுங்கள் 
துரோகிகளை ......

தன்னம்பிக்கையோடு 
எதிர் கொள்ளுங்கள் 
தாங்க முடியா தருணங்களையும் ......



ஜூன் 01, 2022

ஹைக்கூ கவிதைகள்

மனம் எனும் காட்டிற்குள்
அலைந்து திரியும்
ஆயிரம் உணர்வுகளெனும் விலங்குகளை
அடக்க பிறந்தவன்
மனிதன் ........

உருவம் தந்த உடலை மட்டும் புதைத்து
புதைக்க முடியா நினைவுகளோடு
வாழச் செய்கின்றது
மரணம் ........

எனக்குள் வலிக்கும் என்று
எழுத மறுக்கின்றது உன் பெயரை
என் பேனா .......

மே 21, 2022

அன்பு மகனுக்கு ஒரு கடிதம் .....



அன்பு மகனுக்கு.......

உன் முத்தத்தின் ஈரத்தை
துடைக்கத் தெரியாது
என் கைகளுக்கு ........
உன் கண்ணீரின் ஈரத்தை
துடைக்கத் தெரிந்த கைகளால்
விரல் நுனியின் பிடியில்
மலரும் ஓர் அன்பு மடல் .......

அன்பெனும் வீட்டிற்குள் 
அடைபட்டு கிடந்தாய் .....
பறந்து தனியே 
பாதை தேடி 
பயணப் பட போகின்றாய் .......
வழியெங்கும் 
வலிமைகளும் 
வலிகளும் 
வந்து சேரும் 
அனுபவங்களாய் .....
எதுவாயினும் 
ஏற்றுக் கொள்ள பழகிக்  கொள் .....

தராசுக் கற்கள் அல்ல 
உன் வாழ்க்கை 
அடுத்தவர் எடை தூக்கிப் பார்க்க ......
வைரக் கற்கள் 
மெருகேற்றிக் கொள் 
தன்னம்பிக்கையோடு ......

அடுத்தவர் பற்றி குறை கூறியே 
காலம் கடத்தும் மனிதர்களை 
கடந்து செல்ல பழகிக் கொள் .......

வலி தரும் விமர்சன வாளால் 
வெட்டி சாய்க்கும் மனிதர்களிடம் 
எட்டி நிற்க பழகிக் கொள் ......

அடுத்தவர் பார்வைக்காக , பகட்டுக்காக 
அலங்கரிக்காதே உன் வாழ்க்கையை .......
தேவைகளை குறைத்துக் கொண்டு 
வாழப்  பழகிக் கொள் ........
தேவதைகளும் வந்து வாழ்த்து சொல்வர் ......

பதக்கங்கள் , பரிசுகள் மட்டும் 
அலங்கரிக்கப் போவதில்லை 
உன் வாழ்க்கையை ....
நல்லெண்ணங்களும் , தன்னம்பிக்கை மட்டுமே 
அலங்கரிக்கும் 
உன் வாழ்க்கையை ......

யாருக்கும் நிரந்தரமல்ல 
வெற்றியும் , தோல்வியும் .......
தோல்வியும் 
தோற்றுப் போகும் 
உன்னையே நீ 
தேற்றிக் கொண்டு 
போராடும் போது .......

தீர்க்க முடியா பிரச்சனையென்று 
எதுவும் இல்லை என்பதை 
தீர்க்கமாய் நம்பு .....
தீர்வு கிடைக்கும் நிச்சயமாய் ........

இன்பமோ , துன்பமோ 
ஏற்றுக் கொள்ள பழகிக் கொள் ......
வாழ்க்கை வாழ்வதற்க்கே 
இதுவும் கடந்து போகும் 
என்ற நம்பிக்கையை மட்டும் 
ஒருபோதும் 
இழந்து விடாதே .........
























ஏப்ரல் 02, 2022

விழியென்னும் புதைகுழி

உதடுகள் 
பேச  தயங்கும் 
வார்த்தைகளை 
பேசுகின்றது 
நம்  விழிகள் .......

என்னை  இழுக்கின்றது 
உன்  விழியென்னும்  புதைகுழி .......
அதனால்  தான் 
மௌனமாய் 
தலை குனிந்து செல்கின்றேன் 
உன்னை கடக்கும்  போது  மட்டும் ..........

மார்ச் 02, 2022

என் உயிரே ....


கவிதை வரிகளாய்
உன் வார்த்தைகள் ......
அர்த்தம் தேடியே தினம்
அலைகின்றேன் நான் .......

புதிர் போடும்
உன் புன்னகைக்கு
விடை தேடியே
விடியலைக்  கூட  விரும்பாமல் 
விழுந்து  கிடக்கின்றேன்  நான் .......

விருப்பம்  அறிந்தும் 
விலகி செல்கின்றாய் .....
மௌனமாய் 
எட்டாத தூரத்தில் ......
விடை கிடைக்கும் நாளில் தான் 
என் வானில் விடியல் ......

காத்திருக்கின்றேன் 
தூணென  உனைத் தாங்க .....
தூக்கி  எறியாதே 
காகிதமாய்  எனை .......





பிப்ரவரி 01, 2022

ஹைக்கூ கவிதைகள்

விரல்  பட்டால்  வாடி விடுவேன்

எட்டி  நின்றே  எனை  ரசித்திடு 

ரோஜா ......


ஓடும்  வரை  மதிப்புண்டு 

ஓய்ந்து  நின்றால்  மதிப்பில்லை 

கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......


அழிக்கின்றாய்  காடுகளை 

தகர்க்கின்றாய்  மலைகளை 

உறிஞ்சுகின்றாய்  நதிகளை 

எரித்திடுவேன்  என்பதால் 

எனை  மட்டும்  தொட  அஞ்சுகின்றாய் 

சூரியன் ........

ஜனவரி 06, 2022

ஹைக்கூ கவிதைகள



நீரும் , காற்றும் இருந்திருந்தால்

என்றோ விற்கப் பட்டிருப்பேன்

வானம் ........




வெட்டப்பட்ட கைகள்

வலியில் துடிக்கின்றன

வாயில்லா மரங்கள் ...........




விளம்பரம் , விமர்சனம் அன்றி

தன் வேலையைச் செய்கின்றது

இயற்கை ............