மே 21, 2022

அன்பு மகனுக்கு ஒரு கடிதம் .....



அன்பு மகனுக்கு.......

உன் முத்தத்தின் ஈரத்தை
துடைக்கத் தெரியாது
என் கைகளுக்கு ........
உன் கண்ணீரின் ஈரத்தை
துடைக்கத் தெரிந்த கைகளால்
விரல் நுனியின் பிடியில்
மலரும் ஓர் அன்பு மடல் .......

அன்பெனும் வீட்டிற்குள் 
அடைபட்டு கிடந்தாய் .....
பறந்து தனியே 
பாதை தேடி 
பயணப் பட போகின்றாய் .......
வழியெங்கும் 
வலிமைகளும் 
வலிகளும் 
வந்து சேரும் 
அனுபவங்களாய் .....
எதுவாயினும் 
ஏற்றுக் கொள்ள பழகிக்  கொள் .....

தராசுக் கற்கள் அல்ல 
உன் வாழ்க்கை 
அடுத்தவர் எடை தூக்கிப் பார்க்க ......
வைரக் கற்கள் 
மெருகேற்றிக் கொள் 
தன்னம்பிக்கையோடு ......

அடுத்தவர் பற்றி குறை கூறியே 
காலம் கடத்தும் மனிதர்களை 
கடந்து செல்ல பழகிக் கொள் .......

வலி தரும் விமர்சன வாளால் 
வெட்டி சாய்க்கும் மனிதர்களிடம் 
எட்டி நிற்க பழகிக் கொள் ......

அடுத்தவர் பார்வைக்காக , பகட்டுக்காக 
அலங்கரிக்காதே உன் வாழ்க்கையை .......
தேவைகளை குறைத்துக் கொண்டு 
வாழப்  பழகிக் கொள் ........
தேவதைகளும் வந்து வாழ்த்து சொல்வர் ......

பதக்கங்கள் , பரிசுகள் மட்டும் 
அலங்கரிக்கப் போவதில்லை 
உன் வாழ்க்கையை ....
நல்லெண்ணங்களும் , தன்னம்பிக்கை மட்டுமே 
அலங்கரிக்கும் 
உன் வாழ்க்கையை ......

யாருக்கும் நிரந்தரமல்ல 
வெற்றியும் , தோல்வியும் .......
தோல்வியும் 
தோற்றுப் போகும் 
உன்னையே நீ 
தேற்றிக் கொண்டு 
போராடும் போது .......

தீர்க்க முடியா பிரச்சனையென்று 
எதுவும் இல்லை என்பதை 
தீர்க்கமாய் நம்பு .....
தீர்வு கிடைக்கும் நிச்சயமாய் ........

இன்பமோ , துன்பமோ 
ஏற்றுக் கொள்ள பழகிக் கொள் ......
வாழ்க்கை வாழ்வதற்க்கே 
இதுவும் கடந்து போகும் 
என்ற நம்பிக்கையை மட்டும் 
ஒருபோதும் 
இழந்து விடாதே .........
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக